மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி மற்றும் உதவித் தொகைகள் உள்பட இதர அரசு சார்ந்த உதவிகள் அனைத்தும் மீன்வள நல வாரியம் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் உறுப்பினர் சேர்க்கையானது ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குக்குளி தொழிலாளர்கள் சங்கத்தில் வைத்து இன்று (ஆக.26) நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் கூறுகையில், “மீன்பிடி தொழிலாளர்களின் நலனுக்காக மீன்வளத்துறை சார்பில் மீனவர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது வரவேற்க கூடியது. ஆனால் சூழ்நிலையின் காரணமாக முதலாமாண்டு தவணை தொகை செலுத்தாத நபர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து மூன்றாவது வருடத்திலேயே அவர் மீண்டும் தனது கணக்கை புதுப்பித்து தொடங்கக் கூடிய சூழல் உள்ளது. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும். மீனவர் நல வாரியத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் மீனவர் நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏற்கனவே 2018, 2019 ஆண்டுகளில் மீனவர் நலவாரிய அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் மீனவர் நலவாரிய அட்டை வழங்கப்படவில்லை.
இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் எதுவும் முறையாக பெற முடிவதில்லை. மீனவனுக்கு இழப்பீட்டு தொகை பெற வேண்டும் என்றால் 18 ஆவணங்களை இணைத்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் இழப்பீடு தொகையானது கிடைப்பதில்லை. விதிகள் இப்படி இருக்கையில் மீனவர் நல வாரியத்தில் இருந்து மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடையாள அட்டை கூட சரியாக கிடைப்பதில்லை.
சமீபத்தில் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு சலுகைகள் மற்றும் தொழில் கடன்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தன. ஆனால் அவர்கள் அறிவித்த திட்டத்தின்படி இதுவரை யாரும் தொழில் கடன் பெற்று பயனடையவில்லை.
ஆகவே மீனவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை மீனவர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:விருதுநகரில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு!