தூத்துக்குடி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அலுவலர் (டாப்கோபெட்) அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று (ஜனவரி 27) நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன் வளம், மீனவர் நலத்துறை மறறும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின்போது கனிமொழி மற்றும் அமைச்சர்களை சூழ்ந்த மீனவர்கள் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அப்போது மீனவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் கடலில் தங்கி மீன் பிடிக்க இரட்டைமடி, சுருக்குமடி வலைகளுடன் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், தூத்துக்குடி துறைமுகத்தில் மட்டும் தான் அனுமதிக்கப்படவில்லை. கலைஞர் இருக்கும்போது மீன் பிடி தொழில் செழிப்பாக இருந்தது.
தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் வாழ்வாதாரம் மோசமாக உள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். அருகில் உள்ள வேம்பார் பகுதியில் தங்கு கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், எங்களுக்கு அனுமதி இல்லை. ஆகவே, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய வந்த 58 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்