தூத்துக்குடி: தருவை குளத்தைச் சேர்ந்தவர் தனுஷ்மதி. இவர் தனக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த ஆக.31ஆம் தேதி அதிகாலை தருவைக்குளம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக தங்குகடலுக்குச் சென்றார். இவருடன், தருவை குளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் டைசன், மீனவர் ரோஷன், மைக்கேல், ராஜு, வெள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேது, ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த அஜய், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த சேது என ஒன்பது மீனவர்கள் சென்றனர்.
மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் இன்று (செப்.22) அதிகாலை சுமார் 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். விசைப்படகானது தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் திருநெல்வேலி மாவட்டம், உவரி கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, படகில் பயணித்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (36) என்பவர் திடீரென படகிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி கடலுக்குள் விழுந்தார். அதனைத்தொடர்ந்து, அவரை காப்பாற்ற உடன் இருந்தவர்கள் முயற்ச்சித்தனர். ஆனால் அவர் நீரில் மூழ்கியதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவருடன் பயணித்த மீனவர்கள் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பல்வேறு நபர்கள் வரவழைக்கப்பட்டு அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, மீனவர்கள் கடலோர காவல் படையினருக்குடத் தகவல் தெரிவித்தனர். தற்போது காவல் படையினரின் உதவியுடன் மீனவர்கள் ராஜ்குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி கோர விபத்து! நடுரோட்டில் பற்றி எரிந்த மின் பேருந்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!