தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணும் நாள் என்பதால் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். இதன்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் 250 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது எனவும், கலந்துகொள்ளும் நபர்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர்.
இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கூறும்போது, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சிகள் எடுத்த என்னை, சிலர் வெளியே சமூக விரோதி போன்று சித்தரித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் யாரும் அவர்களின் சொந்த பிரச்சனைக்காக சென்று உயிரிழந்தவர்கள் அல்ல. அவர்களின் இறப்பு வலியானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும்.
போராட்டத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து மக்கள் அழுவதற்கு கூட இங்கே உரிமை இல்லை. தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக விரட்டுவோம் என்ற உறுதி மொழியையும் நாங்கள் எடுக்க இருக்கிறோம். இந்த நினைவஞ்சலி கூட்டம் அமைதியான முறையில் நடைபெறும்’ என்று கூறினார்.