தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தமிழர் விடுதலைக் களம் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழர் விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கணேச ராஜா, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் சரவணன், துணைப் பொதுச் செயலாளர் கசாலி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், "தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கும், முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
தமிழக சட்டமன்ற தொகுதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை வழங்குவதில் தேவேந்திர குல வேளாளர் சமுகத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்திட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக சேர்த்திட வேண்டும். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் வட மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் வழங்கப்பட்டு வருவதை தவிர்த்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது" எனத தெரிவித்தார்.