தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குருசாமி(37), செண்பகராஜ்(29), செந்தில்குமார்(26) ஆகியோர் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்தனர். இதனால், கோவில்பட்டியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இறைச்சி விற்பனையாளர்கள் மூவரும், முருகனை கொலை முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு முருகன் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குருசாமி, செண்பகராஜ், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களான குருசாமி, செண்பகராஜ், செந்தில்குமார் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.