தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மக்களைவை உறுப்பினர் கனிமொழி, மூன்றாவது மைல் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நாடு முழுவதும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்பதற்கு அனைத்து தரப்பு அலுவலர்களும், ஊடகங்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் தான் நாம் கடமையை செய்வதற்கு நினைவு படுத்த வேண்டுமா? என்று கேட்டுள்ளார்கள். அதனால் அதனை புரிந்து கொண்டு நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எனவே, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசும் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றவுள்ளதாக கூறியதை அறிவிப்போடு நிறுத்தி கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.