தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ போட்டியிடுகிறார்.
இதையடுத்து, தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏபிசிடி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து திமுக வேட்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், ’எதிர் வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும்’ என்றார்.
முன்னதாக, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் திறப்பு விழா திமுக கட்சியின் சார்பில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் கீதா, அங்கிருந்து திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க:பண மூட்டையுடன் அலையும் துரோக கூட்டணி -அதிமுக-வை சாடிய டிடிவி!