பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
திமுக பொறுப்பாளர்களில் ஒருவரான ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சுக்கள் யாவும் அவர் பேசியது அல்ல. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது.
அவர் கூறிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இஸ்லாமிய சகோதரர்களையோ, மற்றவர்களையோ யாரையும் இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசின் நோக்கமல்ல.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தூண்டப்படுகிறார்கள். இதில் வதந்தியை பரப்பி கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக சில பேர் மரணமடைவதன் மூலம் திமுக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது.
இதற்கு திமுகவும், காங்கிரசுமே நூற்றுக்கு நூறு விழுக்காடு முழு பொறுப்பு. இலங்கை தமிழர்களை அவர்களின் விருப்பப்படி விரும்பும் இடத்திற்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகி கொண்டிருக்கின்றது.
அதனால் இது சம்பந்தமாக யாரும் பிரதமர் மோடிக்கு சொல்லித்தர வேண்டிய தேவையில்லை” என்றார்.
இதையடுத்து, சிலிண்டர் விலையேற்றம் குறித்த கேள்விக்கு, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுனுடைய விலைக்கு ஏற்றவாறே சிலிண்டர் விலை ஏற்றங்கள் உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு கச்சா எண்ணெயினால் உருவாகும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நமது நாட்டில் இயற்கையாகவே கிடைக்கும் எரிவாயுவை எடுக்கவும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இவை எல்லாம் திமுக, காங்கிரஸின் பொய் வேலைகள். வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. அதுபோல் அங்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும், என பதிலளித்தார்.