தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக பிரேமலதா தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிக்கையில், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் தவறு செய்துவிட்டதாக நினைக்கின்றனர். இந்த இடைத்தேர்தலில் எங்களது கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், பொதுவாக மக்கள் பிரச்னைகளில் தேமுதிக தலையிடுவதில்லை என்ற பேச்சு முற்றிலும் தவறானது என்றார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கு நிச்சயம் காக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என சொன்ன பிரேமலதா, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதை முதல் நபராக பின்பற்றுவது தேமுதிகதான் எனக் கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை எனத் தெரிவித்த அவர், தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் யார், யார் வேட்பாளர்கள் என்ற பட்டியலை நாங்கள் வெளியிடுவோம் எனக் கூறியுள்ளார். தனித்து போட்டியிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தேர்தல் அறிவிப்பு வரட்டும் அதன் பின்னர் இது குறித்து தெரிவிக்கப்படும். அதுவரை எங்களது கூட்டணி தொடரும்' என்றார்.
அக்டோபர் 19ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.