தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவுக்கு உள்பட்ட ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வு பணிகள் மே 25ஆம் தேதி தொடங்கி தற்போது வரை, பல்வேறு குழுக்களாக ஆராய்ச்சி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு களத்தினை தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் உதயச்சந்திரன் இன்று (செப்.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அகழாய்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், எச்சங்கள், தமிழ்-பிராமி எழுத்து ஆதாரங்கள், பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இந்நிலையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேலும் ஒரு மைல்கல்லாக 3000 ஆண்டுகள் பழமையான வடிகால் ஓடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்களின் கட்டட அமைப்புகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொல்லியல் துறையின் உயர் மட்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே இதன் உண்மையான காலக்கட்டம் என்ன என்பது தெரியவரும்.
இதையும் படிங்க:முதலமைச்சர் தொடங்கி வைத்த பணியில் முறைகேடு - எம்எல்ஏ திடீர் ஆய்வு