வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் இன்று (டிச.3) நள்ளிரவு பாம்பன்-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர்கள் குமார் ஜெயந்த், சாரங்கபாணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவாத்து மைதானத்தில் களப்பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த புயல் மீட்பு கருவிகளை வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் சாரங்கபாணி பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்ய காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் முகாமிட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: புரெவி புயல்: தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 40 பேர் தூத்துக்குடி வருகை!