தூத்துக்குடி: இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா புகழ்பெற்றது. தற்போது இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் அக்டோபர் 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. மேலும் இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடும் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழா நாட்களில் தினமும் காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அம்மன் சக்கர பவனியும் நடக்கிறது.
தசரா திருவிழாவின் போது நேர்த்திக்கடனாக காளி, அம்மன், சிவன், கிருஷ்ணன், முருகன், விநாயகர் போன்ற சுவாமி வேடங்கள் குறவன், குறத்தி, பெண் போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்று பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்கள் காணிக்கை வசூலித்து கோயிலில் ஒப்படைப்பது வழக்கம். இதில் காளி வேடமணியும் பக்தர்கள் 60 நாள், 40 மற்றும் 20 நாட்கள் அடிப்படையில் விரதம் இருப்பர்.
இதையும் படிங்க: தாயை கவனிக்க தவறிய மகனுக்கு 3 மாதம் சிறை - தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி!
தற்போது 60 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதம் துவங்கினர். கடும் விரதம் மேற்கொண்டு காளி வேடமணியும் மாலை அணிந்த பக்தர்கள் தங்களுக்கு என்று தனி குடிசை அமைத்து முத்தாரம்மன் படம் மற்றும் காளி வேடத்திற்கான கிரீடம் சடை முடி சூலாயுதம், வீர பல், கண்மலர் போன்றவற்றை வைத்து காலை மாலை என இரு முறை பூஜை செய்வது வழக்கம்.
இதற்காக காலை மற்றும் இரவில் பழம் அவல் இடித்த பச்சை அரிசி சாதம் தாளிக்காத பருப்பும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வார்கள். கடும் நோய்களால் பாதிக்கப்பட்டு, அம்மனுக்கு நேர்ச்சை செய்து குணமானவர்கள் அல்லது பல வருடங்களாக சாதாரண வேடம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே காளி வேடம் அணிவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நாடாளுமன்றத்தில் மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - டி.ஆர்.பாலு