தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன், கடந்த வாரம் தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இத்திருமணத்தில், சென்னையிலிருந்து வந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபருக்கும் அவரது மனைவி, அவருடைய ஐந்து வயது மகள் என மூவருக்கும் தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் மூவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவரது வீட்டில் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதாரப் பணியாளர்களால் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், அதேபோல சென்னை சென்று திரும்பிய லாரி ஓட்டுநருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. அவரது வீட்டின் அருகேயும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர அலுவலர் மருத்துவர் அருண்குமார் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வுசெய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பல்வேறு மாநில, மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 329 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அதேபோல இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் பயிலும் செவிலியர் மாணவிக்கு கரோனா!