தூத்துக்குடி: தொழிலதிபர் பொன்பாண்டி என்ற ரவி டீக்கடை, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் பார் உள்ளிட்ட தொழில்கள் செய்துவருகிறார். இந்த நிலையில் இவருக்கும் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் மகாராஜன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இதில் உதவி ஆய்வாளர் மகாராஜன், பொன்பாண்டியை கொலை செய்யும் நோக்கில் கூலிப்படையினரை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொன்பாண்டி நேற்று (ஜூன் 18) புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பொன்பாண்டி பேசுகையில், "தாளமுத்துநகர் பகுதியில் தொழில் செய்துவரும் எனக்கு உதவி ஆய்வாளர் மகாராஜன் தொழில்ரீதியாக பல நெருக்கடிகள் கொடுத்துவந்தார். அவருடைய எண்ணத்திற்கு ஏற்ப பணம், பொருளைத் தரவேண்டும் என வற்புறுத்தினார். இதற்கு உடன்பட மறுத்ததால் ஏற்கனவே இரண்டு முறை கூலிப்படையினரை ஏவி கொலைசெய்ய முயன்றார். ஆனால் இதை தெரிந்து சுதாரித்துக்கொண்ட நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.
மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் தனியார் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. விசாரணையில் உதவி ஆய்வாளர் மகாராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நேற்று மீண்டும் என்னை கொலைசெய்ய முயற்சி செய்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை