தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சின்ன மணி நகர்ப் பகுதியில் பக்கீல் ஓடை அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை சுமார் 30 ஆண்டுகளாகத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வந்ததையடுத்து, மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளரை காலி செய்ய உத்தரவிட்டது. மாநகராட்சிக்குச் சாதகமாக அமைந்த நீதிமன்றத்தின் தீர்ப்பினால், தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராமச்சந்திரன் தலைமையில் நகர உதவி திட்டமிடல் அலுவலர் மகேந்திரன், உதவிப் பொறியாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் நாகராஜ், நகரச் சார்-ஆய்வாளர் பிரபாகர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த சிறிய கட்டுமானங்களையும் அகற்றினர்.
இதைப் போன்று கந்தன் காலணி பகுதியில் தனியார் வசமிருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். இது குறித்து ஆணையாளர் தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாநகரப் பகுதி சாலைகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி சின்ன மணி நகர், ஆசிரியர் காலணி சந்திப்பு மற்றும் கந்தன் காலணி ஆகிய பகுதிகளில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மூன்று கோடி மதிப்பிலான 11 சென்ட் நிலங்களை மாநகராட்சி நேற்று(டிச.12) கையகப்படுத்தியது.
எனவே இது போன்ற மாநகராட்சி நிலங்களைத் தற்காலிக மற்றும் நிரந்தர தடுப்புகளால் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் உடனடியாக தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு உண்டான செலவினங்களையும் ஆக்கிரமிப்பாளரிடம் வசூலிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளர் உடன் மத்திய குழு ஆலோசனை.. 2 நாட்கள் இரண்டு பிரிவாக மிக்ஜாம் புயல் பாதிப்புகள் ஆய்வு!