தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட வாழவல்லான் கிராமத்தை சேர்ந்த இசக்கி - மாலையம்மாள் தம்பதியினருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கணவர் இசக்கி இறந்த பின்பு முத்துக்குமாரின் தாயார் மாலையம்மாள் உரிய பராமரிப்பின்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாலையம்மாள் புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர், மாலையம்மாளுக்கு அவரது மகன் முத்துக்குமார் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டுமென கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் மாலையம்மாளுக்கோ, முத்துக்குமார் பணம் ஏதும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி மாலையம்மாள் தனது மகன் முத்துக்குமார் தனக்கு எந்த உதவியும் செய்வதில்லை என புகார் அளித்து உள்ளார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சித் தலைவர் மூலம் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டார். அதன் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையிலான ஏரல் போலீசார், முத்துக்குமாரை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
தன்னைப் பெற்ற தாயை கவனிக்க தவறிய மகனை மாவட்ட ஆட்சியர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இத்தகைய செயலுக்கு பலரது தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.