தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆக்சிஜன் உற்பத்தி பகுதிக்கு வரும் பணியாளர்கள் எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது, உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு தனியாக பாதை அமைப்பது குறித்தும் கள ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.