தூத்துக்குடி: இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் நேற்று (பிப்.17) வெளியான திரைப்படம், பகாசூரன். இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றிலும் பகாசூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் படத்தின் இடைவேளையின்போது திருச்செந்தூரைச் சேர்ந்த மகாதேவி என்பவர், திரையரங்கத்தின் உள்ளே இருந்த கேண்டீனில் பாப்கார்ன் வாங்கியுள்ளார். அதில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக இது குறித்து திரையரங்க நிர்வாகம் மற்றும் கேண்டீன் பணியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திரையரங்கு நிர்வாகமும், பணியாளர்களும் புகார் அளித்த பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதனால், அந்த பெண் திரைப்படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறி உள்ளார். இதனிடையே தனியார் திரையரங்கில் விற்கப்பட்ட பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், திரையரங்கில் விற்கப்படும் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதாகவும் ரசிகர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையும், மாவட்ட நிர்வாகமும் திரையரங்க நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பார்வையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது, தின்பண்டங்களின் தரத்தை உறுதி செய்து, அதன் விலை அதிகபட்ச வரம்பு விலையைத் தாண்டி விற்கப்படாத சூழலை உருவாக்க வேண்டும் என பல்வேறு நுகர்வோர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆங்கர் டூ ஆக்டர்.. டைமிங் காமெடி கில்லாடி.. நம்ம வீட்டு பிள்ளைக்கு இன்று பிறந்தநாள்!