தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தூய்மை பணியை நிறைவேற்றும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளையும், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள நான்கு டாடா ஏசி வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
மேலும், பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஓருங்கிணைந்து நடைபெற்ற தூய்மை பணிகளையும் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதியில் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்று (மே14) தூத்துக்குடி மாநகர மக்கள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையில் வாழ்வதற்கும் மாநகராட்சி மூலம் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் நோக்கமே மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், தூய்மையயை கடைபிடிக்க வேண்டும், சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்பதே எனக் கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ரோஜா மலர் கண்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்!!