உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.
அந்த வகையில், தூத்துக்குடி பெரைரா தெருவைச் சேர்ந்த இசிடோர் பெர்னான்டோ - பெர்லின் தம்பதியினர் தங்களின் வீட்டில் உலக சமாதானம், பாலியல் குற்றங்களைத் தடுத்தல், இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு உள்ளிட்டவற்றை சித்தரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், ‘இயேசுவின் பிறப்பை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டு நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் அடிப்படையில் குடில் அமைத்து வழிபடுவது வழக்கம். அந்த அடிப்படையில், இதனை அமைத்துள்ளோம். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இந்த வருடம் உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
புதிய குடியுரிமை சட்டத் திருத்தம், குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகவும், அவர்களைப் புறந்தள்ளக்கூடியதாகவும் அமைந்துள்ளது. எனவே, இதுகுறித்து கருத்து சித்தரிக்கும் வகையில் குடில் அமைத்துள்ளோம். நாட்டில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், பெண்கள் போற்றப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாகவும் கருத்து சித்திரங்களைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளோம்.
மேலும், இந்த கிறிஸ்துமஸ் குடிலை உதவாது என தூக்கி வீசப்பட்ட ஸ்கெட்ச் பேனாக்கள் கொண்டு அமைத்துள்ளோம். இதில் சுமார் 2,000 ஸ்கெட்ச் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக சமாதானத்துக்காக உலகில் உள்ள அனைத்து மக்களும் நட்புறவும், பகிர்வும், சகிப்புத் தன்மையுடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டு இயேசு பாலன் பிறப்பை வரவேற்கும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் விழா அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என்றனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸை முன்னிட்டு கலைகட்டும் கேக் விற்பனை!