தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமுவேல் - திவ்யா தம்பதி. சாமுவேல், கப்பலில் சமையல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எல்லோரா (ஒன்றரை வயதில்) என்ற மகள் இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்துள்ளார். அங்கு தனது மகளுக்கு சளித் தொல்லை பிரச்னை அதிகமாக காணப்பட்டதால், செல்வ விநாயகபுரம் சாலையில் அமைந்துள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனிடையே இன்று காலை, மருத்துவர்கள் எல்லோராவுக்கு ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே மூச்சு பேச்சின்றி உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த மருத்துவமனைக்கு விரைந்த வடபாகம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை சாமுவேல் கூறுகையில், " சளித் தொல்லை காரணமாகவே, எனது மகளை மருத்துவமனையில் அனுமதித்தேன். வேறு எந்தப் பிரச்சனையும் அவளுக்கு கிடையாது. ஆனால், இன்று மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் எனது குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறந்துவிட்ட பின்னும் 45 நிமிடமாக எங்களை ஏமாற்றி உயிரோடு இருப்பதாக நம்ப வைத்துள்ளனர்'' என கதறி அழுதபடியே கூறியுள்ளார். தற்போது, குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆய்வில் எழுந்த சந்தேகம்... பைக்கில் 120 லிட்டர் சாராயம்... கடத்தல்காரரை குண்டுக்கட்டாக தூக்கிய காவலர்கள்!