தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சி.டி.ஸ்கேன் இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனை சரிசெய்ய, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதாகி பல நாள்களாகியும், அதனை சரிசெய்ய மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
சி.டி ஸ்கேன் மூலம் தான் கரோனா தொற்று உட்பட பல்வேறு நோய்களை கண்டறியவும், விபத்தில் சிக்கியவர்களுக்கும், அவசர, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு உயிர் காக்க இந்த இயந்திரம் உதவிகரமாக உள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இயந்திரத்தை சரிசெய்வதில் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டிக்கிறது. மேலும் போர்க் கால அடிப்படையில் சி.டி ஸ்கேன் இயந்திரத்தை சரிசெய்ய தமிழ்நாடு அரசும், மருத்துவமனை நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!