தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்ற இளைஞரை காவல் துறையினர் சட்ட விரோத காவலில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மகேந்திரனின் தாயார் வடிவு நீதி விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் மகேந்திரன் இறந்தது தொடர்பாக தூத்துக்குடியில் நேற்று (ஜூலை22) தங்களது விசாரணையைத் தொடங்கினர். மகேந்திரனின் உடன்பிறந்த சகோதரி சந்தனமாரி வீட்டிலிருந்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல் துறையினர், மகேந்திரனை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுது அவரின் உடல்நிலை, உடலில் உள்ள காயங்கள் குறித்து அவரிடம் சாட்சியம் பெற்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை23) சந்தனமாரியிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தினார்கள். இன்று (ஜூலை 23) மாலை 3 மணிக்கு விசாரணையை தொடங்கிய சிபிசிஐடியினர், தொடர்ந்து சந்தனமாரி, மகேந்திரனின் தாயார் வடிவு ஆகியோரிடம் சாட்சியம் பெற்றனர்.
இதையும் படிங்க....வனிதா விஜயகுமார் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா தேவி கைது