தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (35). இவரது சித்தப்பாவின் நிலத்தை உசரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயவானர் திருமணவேல் வாங்கியபோது, செல்வன் குடும்பத்திற்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 17ம்தேதி செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தட்டார்மடம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க செல்வனின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து விசாரணை நெல்லை மாவட்டம், திசையன்விளைக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது காவலர்கள் வழக்கு பதிந்தனர்.
இதற்கிடையே செல்வனின் சொந்த ஊரான சொக்கன் குடியிருப்பில் அவரது மனைவி ஜீவிதா மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், திருமணவேல் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் தேடப்பட்ட திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைத்தனர். இதுதவிர, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை நெல்லை டிஐஜி பிரவீன் குமார் அபினபு சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் பிற்பகலில் உத்தரவிட்டார். மேலும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இந்த விவரங்களை துரத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நத்தூரி, எஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் ஆர்டி.ஓ தனப்பிரியா ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட செல்வன் மனைவி ஜீவிதாவுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க சிபாரிசு செய்யப்படுவதுடன், பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு நேற்று முன்தினம் செல்வனின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்று சொக்கன் குடியிருப்பில் அடக்கம் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டதால், வழக்கை டிஎஸ்பி அனில்குமார் விசாரணைக்கு எடுத்து கொள்கிறார்.
ஏற்கனவே சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கொலை வழக்கில் சிபிஐக்கு முன் சிபிசிஐடி டிஎஸ்பியான அனில்குமார் தான் விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தவிர சாத்தான்குளம் இளைஞர் மகேந்திரன் மரணம் தொடர்பான வழக்கை டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு கோப்புகளை நெல்லை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பிரகாஷ், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் இன்று ஒப்படைத்தார்.
இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி காவலர்கள் ஒன்றே இன்றே தொடங்கியுள்ளனர். செல்வம் கொலை வழக்கில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
இந்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவலர்கள் நீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: செல்லூரில் அழகுமுத்துகோன் சிலையா, கபடிவீரன் சிலையா? ஆட்சியர் அறிக்கல் தாக்கல்செய்ய உத்தரவு