தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்கள் விற்பனை, பதுக்கல், கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல் துறையின் தீவிர நடவடிக்கையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 24 கிலோ 660 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் சமீபத்தில் வடபாகம் காவல் நிலைய பகுதியில் 1.25 டன் சிக்கியது. இதுதொடர்பாக 10 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், மூன்று கார்கள், ஒரு லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்களுக்காக இரு நபர்கள் பெருமளவு கஞ்சாவை கடத்தி வருவதாக திருச்செந்தூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து தகவலின் அடிப்படையில் ஆவுடையார்குளம் கரை அருகே வாகனத் தனிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த பைகளை காவல் துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
அதில், காப்பி நிற கட்டிகளாக சுமார் 25 கிலோ எடைகொண்ட ‘செரஸ்’ ரக (பதப்படுத்தப்பட்ட கஞ்சா) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பானது சர்வதேச சந்தையில் கிலோ ரூ.30 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த போதைப் பொருட்களின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
கஞ்சாவை கடத்தி வந்த நாகர்கோயிலைச் சேர்ந்த செந்தில் குமார் (43), நாங்குநேரியைச் சேர்ந்த துரைராஜ் (44) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த கோடி கணக்கான மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் மீது ஏற்கனவே கொலை, திருட்டு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும், இருச்சக்கர வாகனத்தில் வந்த மணி, மகேஸ்வரன் எனும் நபர்கள்தான் அவர்களிடம் செரஸ் போதைப் பொருளை கொடுத்து சென்றதும் தெரியவந்தது.
தகவல் அறிந்த திருச்செந்தூர் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பறிமுதல் செய்யப்பட்ட செரஸ் போதைப் பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தப்பிச் சென்ற மணி, மகேஸ்வரனை பிடிக்க தனிப்படைக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருச்செந்தூர் காவல் துறையினர், செரஸ் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள், கடற்கரை மார்க்கமாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருளை பிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டினார்.
இதையும் படிங்க:பதுக்கி வைத்திருந்த ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது