முன்னதாக பொட்டலூரணி பகுதியில் தனியார் நிறுவனம் புதிதாக காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது காற்றாலை அமைப்பதற்கான உதிரிப் பாகங்களை கொண்டுச் செல்ல பொட்டலூரணி பகுதியிலுள்ள மரங்களை வெட்டியதாகவும், அங்கு இருக்கும் நிழற்குடை, ஊர் படிப்பகம் ஆகியவற்றையும் காற்றாலை நிறுவனத்தினர் இடித்ததாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அங்கு வந்த பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தனியார் நிறுவனத்தால் இடிக்கப்பட்ட நிழற்குடையை அரசே கட்டித் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த சமூக நல அமைப்பாளர் சங்கரநாராயணன், "பொட்டலூரணி கிராமத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இருந்தது. ஆனால் இதனை தனியார் காற்றாலை நிறுவனத்தின் சுயநலத்திற்காக தொழில்முறை குண்டர்கள் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.
பயணிகள் நிழற்குடையை இடிக்க தனியார் நிறுவனம் திட்டமிடுவது குறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் நாங்கள் முன்கூட்டியே காவல் துறைக்கும், அரசு அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இடிக்கப்பட்ட நிழற்குடை தற்போது அந்த தனியார் நிறுவனம் சார்பில் கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்காக இடிக்கப்பட்ட இடத்தில் மணல், ஜல்லி ஆகியவை கொட்டப்பட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏனெனில் தனியார் நிறுவனத்தினால் கட்டித்தரப்படும் பயணிகள் நிழற்குடை என்பதால் எந்த நேரத்திலும் அந்த தனியார் நிறுவனத்தின் தலையீடுகள் இருக்கலாம். மக்களின் வரிப்பணத்தில் அரசு கட்டித்தரும் நிழற்குடையின் மீதுதான் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது.
ஆகவே தனியார் நிறுவனத்தின் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பயணிகள் நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றார்.