தூத்துக்குடி: பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மற்றும் ஆர்.சசிகலா புஷ்பா ஆகியோர் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டு காலத்திற்குப் பின் இதுவரையில் கிட்டத்தட்ட 48.9 கோடி பேருக்கும் மேலாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. சில பேர் சாத்தியமா என்று கேட்டனர். ஆனால் அதை மோடி அவர்கள் நடைமுறைப்படுத்தினார். ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்று சொன்னால் ஜகத்தையே அழித்துவிட வேண்டும்’ என்று பாரதி சொன்னார்.
அதன் படி, இந்தியாவில் வாழும் 80 கோடிக்கும் மேலான ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒரு ரோடு கூட போடவில்லை. ஆனால் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தங்க நாற்கர சாலையைப் போட்டது. இதனால் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு 25 நிமிடத்தில் போய்விடலாம்.
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு 50 நிமிடத்தில் சென்று விடலாம். நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்த நாட்டினுடைய உள் கட்டமைப்பு, மேம்பாடு வசதி இருந்தால் நாடு முன்னேறும். இதனால் எதிர்காலத்தில் போக்குவரத்து சாலையில் இருக்கின்ற நிலங்களின் விலை மதிப்பு அதிகமாகும். ஒன்பதாண்டுகளுக்கு முன்பு கூரை வீடுகள் நிறைய இருந்தது. ஆனால் தற்போது நரேந்திர மோடி ஆட்சி ஏற்ற பின்பு கூரை வீடு இல்லாத இடமாக எல்லோருக்கும் குடியிருக்கும் வீடு கட்டும் திட்டத்தைப் பிரதமர் தந்துள்ளார்.
மேலும், சமையல் செய்யும் பெண்கள் அடுப்பினால் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்ற காரணத்தினால் அனைவருக்கும் இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல பெண்களுக்குச் சுகாதார வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாப்கின் வசதி, வீடுகளில் கழிவறை திட்டம் போன்றவற்றைப் பிரதமர் கொண்டு வந்தார். இதனால் பொருளாதார ரீதியில் உலகத்தில் ஐந்தாவது பெரிய நாடாக உயர்ந்து நிற்கிறது இந்தியா.
அமெரிக்காவில் கூட இன்று நிதிநிலை பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது. இலங்கையிலும் எதிரொலிப்பு ஏற்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பொருளாதார ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர், அது மட்டுமல்ல இரண்டு ஆண்டுகளில் உலகத்திலேயே பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரக்கூடிய அளவில் நிதிநிலைமை மேலோங்கி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஆட்சி பொறுப்பேற்றுக் கிட்டத்தட்ட 59 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஆறு வழிச்சாலை திட்டம் எட்டு வழி சாலைகளாக மாற்றி உள் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், களையெடுக்கும் கருவிகள் அத்தனையும் விவசாயத்தை மேம்படச் செய்ய பிரதமர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார். எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ’ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் மூலம் ரூபாய் 7 ஆயிரத்து 558 கோடிக்கும் மேலாகக் கடன் உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழியை நாடாளுமன்றத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகக் குஜராத்தில் காசி தமிழ் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் என தமிழை வளர்ப்பதற்கு ஐநா சபைக்குப் போனாலும் சரி அயோத்திக்குப் போனாலும் சரி தமிழின் பெருமையைப் பாரத பிரதமர் கூறி வருகிறார். முதலமைச்சர் வெளிநாடு போவதை யாரும் தடுக்க முடியாது. வெளிநாடு சென்று வந்து எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்கள். எவ்வளவு வேலை வாய்ப்பு வந்தது.
அது சரியான தகவல் இருந்தால் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் வெளிநாடு போய்விட்டுச் சரியான முறையில் இல்லை என்று சொன்னால் வரவேற்க முடியாது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், ”தமிழக அரசு பால் விலையைக் குறைத்தனர். தற்போது அதன் விலையையும் கூட்டி விட்டனர். இதை யாரும் சொல்லமாட்டார்கள். கேஸ் விலை மட்டும் அதிகமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு உள்ளனர். இலவசமாக கேஸ் கொடுத்து இருப்பதை கூற மாட்டார்கள்” என்றுக் கூறினார்.
இதையும் படிங்க: ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு