தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கின்ஸ் அகாதமியின் சார்பில் கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசளிக்கும் விழா இன்று (ஜன. 06) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அகாதமி நிறுவனர் பேச்சிமுத்து தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். விழாவில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கந்தசஷ்டி கவசம் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற 100 மாணவ மாணவியருக்கு 500 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 14ஆம் தேதி தமிழ்நாடு வருவது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகத்தான். கட்சி சார்ந்து எந்த ஒரு பயண திட்டமும் வகுக்கப்படவில்லை. அவரின் பயணத் திட்டம் குறித்த முழு விவரம் தெரியவந்தபின் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பாஜக வேட்பாளர் பட்டியல் என்ற பெயரில் வெளியான 38 நபர்கள் கொண்ட பட்டியல் பொய்யானது. ஏனெனில் பாஜக வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதற்கு இங்கு உள்ள தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
பாஜக வேட்பாளர்கள் யார், யார்? என்பதை முடிவுசெய்வதும் இங்குள்ளவர்கள் கிடையாது. அனைத்துமே பாஜக தலைமை எடுக்கும் முடிவை பொறுத்துதான். எனவே பாஜக வேட்பாளர்களாக 38 பேர் கொண்ட பெயர் பட்டியலை வெளியிட்டது பாஜகவின் வேலை அல்ல. அது கட்சியின் வேலையும் அல்ல.
பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை. நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல எங்களது கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அதனால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து குழப்பம் தேவையில்லை. தற்போதுவரை அதிமுக-பாஜக கூட்டணி மிக வலுவான நிலையில் உள்ளது. புதிய கட்சிகள் சேர்வது தேர்தல் நெருங்கும் வேளையில் தெரியவரும்.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முன்னாள் காவல் அலுவலரான எனது கருத்து” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...குப்பை கொட்ட காசு கட்ட வேண்டுமா - ஸ்டாலின் கடும் விமர்சனம்