கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வேண்டுகோள்விடுத்தும், கரோனாவைத் தடுக்க தனிமைப்படுத்தலைத் தவிர வேறு வழியில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வெளியே சுற்றித்திரிவது நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி எவ்வித காரணமும் இன்றி வெளியிடங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்பட சுமார் 350 பேரின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், வாகனம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கரோனா அச்சத்தையும் மீறி வலம்வந்தால் இனி இருசக்கர வாகனத்தோடு சேர்த்து வாகன ஓட்டிகளுக்கும் வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: கரோனா பாதித்ததாக பொய்யான தகவல் பரவியதால் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்!