தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, 2021ஆண்டு ஓபிசி கணக்கெடுப்பு மற்றும் உடனடி ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (செப்டம்பர் 10) மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவைச் சேர்க்க வேண்டும். 2011 ஆம் ஆண்டில் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.
மருத்துவ படிப்பில் உடனடியாக 50 சதவீத ஒபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டும், ஒபிசி கிரிமிலேயரில் மாத சம்பளத்தை சேர்க்கக்கூடாது, சர்மா குழு பரிந்துரையை ஏற்கக்கூடாது.
உச்ச நீதிமன்றமே இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் தற்போது அந்த இட ஒதுக்கீட்டை நீதிபதி ஒருவர் வழங்க மறுத்து வருகிறார். நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம்பேர் ஓபிசி பிரிவினை சேர்ந்தவர்கள். அந்த 90 விழுக்காடு மக்களில் 70 சதவீதம் பேர் விவசாயிகள். விவசாயிகளுக்கு லாபகரமான விலையும் மத்திய அரசு வழங்குவதில்லை, இட ஒதுக்கீடும் கிடைப்பது இல்லை என்றால் நாங்கள் என்னதான் செய்வது?.
எனவே ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி வருகிற 23ஆம் தேதி சென்னை கோட்டையில் மனு அளிக்கவுள்ளோம். இதைத்தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி குமரி முதல் டெல்லி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும், கிசான் திட்டத்தில் முறையீடு செய்த அலுவலர்கள் கைது செய்யப்பட வேண்டும். அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.