தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகர், சுப்பையாபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, கதிர்வேல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாகக்கூறி பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
செல்வநாயகபுரம், சுந்தரவேல்புரம் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதில் மாநகராட்சி பாரபட்சம் காட்டுவதாகக்கூறி அப்பகுதி மக்களுடன் இணைந்து தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஆக்கிரமிப்பை அகற்ற மறுப்பு தெரிவித்து வருவதாக கீதாஜீவன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: உயிர்காக்கும் 108 வாகனத்தில் மழைநீர் ஒழுகும் அவலநிலை