தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி வருபவர் வேல்ராஜ். இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் முன்நின்று களப்பணியாற்றினார். இதுதவிர மணல் கொள்ளை தடுப்பு மற்றும் இயற்கை ஆர்வலராகவும் செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில் வேல்ராஜை குண்டர் பட்டியலில் சேர்த்து காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று (ஜூலை 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளம்பெண்கள் பாசறை நிர்வாகி அன்னலட்சுமி கூறுகையில், 'ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேல்ராஜை குண்டர் பட்டியலில் இணைத்து காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இயற்கை ஆர்வலராகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளாகவும் இந்த மண்ணுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பணியாற்றி வருபவர்களை அச்சுறுத்தும் விதமாக, அவர்களின் பெயர்களை காவல் துறையினர் குண்டர் பட்டியலில் சேர்த்திருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பொது நலத்திற்காகப் போராடியவர்களை குண்டர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி காவல் துறையினர் தொடர்ந்து மண்ணுக்காகப் போராடியவர்களை குண்டர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.
எனவே, வேல்ராஜை உடனடியாக குண்டர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடுவோம்' என்று தெரிவித்துள்ளார்.