தூத்துக்குடி: மத்திய அரசின் தொழிலாளர் நல விரோதப் போக்கை கண்டித்தும் தனியார்மய கொள்கைகளை எதிர்த்தும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிலாளர் அமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிஐடியு துறைமுக தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் ரசல் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஐஎன்டியூசி., ஏஐடியுசி., ஏஐஐடியூசி., எல்பிஎஃப்., உள்பட பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டன.
கூட்டத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த ரசல் தெரிவிக்கையில், 'பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருகிறது.
சமீபத்தில் தொழிலாளர் நல சட்டத்திருத்த, சட்ட மசோதாவில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பையும் மீறி 4 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி அமல்படுத்தியுள்ளது.
இது தவிர பணமயமாக்கல் கொள்கையின் மூலமாக நாட்டின் துறைமுகங்கள் அனைத்தையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் துறைமுகத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டில் 48% வேலையின்மை
மத்திய தொழிற்சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்தும் தொழிற்சங்கங்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. பாஜக ஆட்சியில்தான் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 48 விழுக்காட்டிற்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது.
எனவே, நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக மாதம் ரூபாய் 7500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
'பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வையுங்கள்'
எனவே, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொண்டபாடில்லை. எனவே, மத்திய அரசின் இந்த தொழிலாளர் நல விரோதப் போக்கை கண்டித்து பிப்ரவரி மாதம் 23, 24ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
அதற்கான ஆயத்த மாநாடு ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பொருட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்தும் தொழிலாளர் விரோதப் போக்குகளை சுட்டிக்காட்டியும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 4 நாட்கள் வாகன பரப்புரை மேற்கொள்ள உள்ளோம்.
இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு பின்னும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் அடுத்த கட்டமாக கலந்தாலோசித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்' என்றார்.
இதையும் படிங்க: மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் - சிறப்பு நேர்காணல்