வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி, வருகிற ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
ஜனவரி 3ஆம் தேதி கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஒன்றியங்களிலும், 4ஆம் தேதி தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
தேர்தல் பரப்புரை
இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பனிமயமாதா ஆலயம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் வருகையையொட்டி, பனிமயமாதா ஆலயத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். சொல்லாத வாக்குறுதிகள் பொருளாதார திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றார். தொடர்ந்து அவரிடம், மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக 210 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றிபெறும்.
தேசிய அளவிலான தொலைக்காட்சி ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் அதிமுக 176 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளனர். பொதுமக்களின் மனநிலையும் அதிமுகவிற்கு சாதகமாகத்தான் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அதிமுக லட்சியம், வெல்வது நிச்சயம்" என்றார்.
இதையும் படிங்க: 'ரஜினிகாந்தின் முடிவு அவரது சொந்த விருப்பம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ