தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் வி.கே. சசிகலா சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோயிலுக்கு வந்தது முதல் வெளியே செல்லும்வரை சசிகலா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். கோயில் தல வரலாறு குறித்து அர்ச்சகர் கூறியதை மட்டும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமமுகவின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.ஆர். சரஸ்வதி, மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கிவரும். இது காலத்தின் கட்டாயம். அனைவரும் ஒருங்கிணைந்து தீய சக்தி திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் ஆசை.
தமிழ்நாடு முழுவதும் அமமுகவுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். எங்கள் வாக்கு குக்கர் சின்னத்திற்குதான் என மகிழ்ச்சியுன் கூறுகிறார்கள். கோவில்பட்டியில் அமமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும். இது காலத்தின் கட்டாயம்.
நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்ததுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த சாதனை. தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுத்தார்கள். அதை கரோனா பாதிப்பின்போதே மக்களுக்கு கொடுத்திருக்கலாம்.
தற்போது சசிகலா ஆன்மிக பயணத்தினை மேற்கொண்டுள்ளார். விரைவில் சசிகலா அரசியல் பயணத்திற்கு வரவேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை. நிச்சயமாக அது நடக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராளிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: பொதுமக்கள் போராட்டம்