தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் (புதன்கிழமை) நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில், கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டி அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் உள்ளிட்ட 36 வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "கரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 6 மாதங்களுக்குப் பிறகு நாளை (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புதுப்பட வெளியீடு தொடர்பாகக் கோரிக்கை வைப்பது உகந்தது அல்ல. புதுப்படத்தை வெளியிடுவது தொடர்பான சிக்கல் குறித்து இருதரப்பும் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அது முடியாத பட்சத்தில் இன்னும் இரு தினங்களில் சென்னை சென்று முதலமைச்சருடன் கலந்தாலோசித்து இருதரப்பினையும் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காணப்படும்" என்றார்.
தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் அந்நாட்டுக் கடற்படையிடம் பிடிபட்ட தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் பிடிபடும்போது தொடர்ந்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை மீட்டு வந்து இருக்கிறது. அதேபோல் இந்த விவகாரத்தைத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்" என உறுதி அளித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாட்டில் நாங்கள் கை காட்டும் நபர் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், " யார் முதலமைச்சர் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எல்.முருகன் அவரது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவ்வாறு கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பார்" என்று கூறினார்.