தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு மாவட்ட, ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
திமுக பக்கம் சாயும் அதிமுக பிரதிநிதிகள்
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக திமுக பக்கம் தாவத்தொடங்கிய சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்ட, ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றும் பணியில், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், தேமுதிக கவுன்சிலர் நிர்மலா அழகர்சாமி, அதிமுக மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலாளர் அழகர் சாமி உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் சேர்ந்தனர்.
மேலும், சில யூனியன் கவுன்சிலர்களும், மாவட்ட கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் அதிமுக உள்ளிட்டப் பிற கட்சியிலிருந்து விலகி திமுகவிற்கு படையெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஆட்சியரிடம் மனு:
இந்நிலையில், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் ஆகியோருடன் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சத்யா, அவரது ஆதரவு மாவட்ட கவுன்சிலர்களான ஞானகுருசாமி (வார்டு 1) , நடராஜன் (வார்டு 3), பிரியா (வார்டு 6), தேவராஜ் (வார்டு 8), அழகேசன் (வார்டு 12), பேச்சியம்மாள் (வார்டு 13), தேவ விண்ணரசி (வார்டு 17) உள்ளிட்டோர் ஜூன் 21ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், ’அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தி, ஆதரவு கொடுப்பதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மோசடியாக செயல்படுத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறு, ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக முறைகேடு செய்துவருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறந்த மீனவர்களின் குடும்பத்தினர் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு