காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கையில், 'தேர்தல் பரப்புபரையில் அதிமுக ஆட்சியில் இதுவரை என்ன செய்திருக்கிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்னைகள், அதற்கு அவர்கள் செய்தது என்ன? என்பது குறித்து பேச வேண்டும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு உண்மையில் பாதுகாப்பு இல்லை. தொழில் ரீதியான வளர்ச்சிகள் இல்லை. மாநில அரசின் கடன் மட்டுமே அதிகமாகிக் கொண்டே போகிறது.
இது குறித்து வெள்ளை அறிக்கையை இதுவரை அரசு வெளியிட மறுக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பணத்தை மட்டுமே அதிமுக தண்ணீராக செலவழித்து வருகிறது. பணத்தைக் கொடுத்தால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் என்ன செய்திருக்கிறார்களோ... அதுக்குத்தான் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
உண்மையில் மக்கள் சற்று மாறி இருக்கிறார்கள். ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் வளர்ந்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் அதிமுகவும், பாஜகவும் கிடையாது. அவர்களின் ஆட்சியில் செய்த அராஜகங்களை கண்டுதான் மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்கிறார்கள். புதிதாக, அதிமுக சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதற்கு எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தினமும் பத்திரிகைகளில் பெண்களில் ஏதாவது ஓரிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள்தான் அதிகம் வருகிறது. இந்த அரசை, மக்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக தேச துரோகி என்று பட்டம் கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
அப்படிப்பட்ட ஆட்சிக்கு ஆதரவாகத்தான் அதிமுக ஆட்சி செயல்படுகிறது' என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க: 'கீழடி வரலாறு தமிழர்களுக்குச் சொந்தமானது' - நடிகர் சசிகுமார் பெருமிதம்!