தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திரையரங்கு திறப்பு நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பின்னர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட சிறப்புக் காட்சிகளை அமைச்சர் பார்த்து ரசித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "கேளிக்கை வரி ரத்து செய்வது மற்றும் குறைப்பது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பார். திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தவிர முறைப்படுத்தப்பட்ட கட்டணங்கள்தான் வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தக்கல் முறையில் டிக்கெட் வழங்குவது கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் வரையறை செய்து அறிக்கை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். அரசின் பரிசீலனைக்கு பின் விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்படும்" என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக நல்லாட்சி நடத்தியிருந்தால் நான் கட்சியே ஆரம்பித்திருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல் ஹாசன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, " 1972ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 10 தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஏழு முறை அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நல்லாட்சி கொடுத்த காரணத்தினால்தான் மக்கள் ஏழு முறை ஆட்சியமைக்க வாய்ப்பளித்துள்ளார்கள். கமல் ஹாசன் மக்களை ஏமாளி என்று நினைக்கிறாரா? மக்கள் விவரம் இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா? தக்க பாடம் புகட்டி அவரை இந்த தேர்தலோடு மக்கள் விரட்டி அடிப்பார்கள். கமல் ஹாசனைவிட ஜாம்பவான்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து போன இடம் தெரியவில்லை. இந்தத் தேர்தல் கமலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்" எனக் கூறினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.