தூத்துக்குடியில் நேற்று(நவ. 16) பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.
அதிகப்படியாக மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் ஓடைகளைத் தூர்வாரவும், தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள்பட்ட ராஜபாளையம் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பைத் தொட்டியில் சுமார் 50 ஆதார் அட்டைகள் கிடந்தன. இதனைக் கண்ட தூய்மைப் பணியாளர்கள் ஆதார் அட்டைகளை மீட்டு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி அஞ்சல் துறை உயர் அலுவலர்கள் இதுதொடர்பாக விசாரித்தனர். விசாரணையில், கடந்த மாதம் அஞ்சல் பை ஒன்று காணாமல்போனது தெரியவந்தது. தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த ஆதார் அட்டை அஞ்சல்களை பெற்று அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.
அதில், அஞ்சல் பை காணாமல்போனதற்கு முந்தைய நாள் தேதியிட்ட சீல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த அஞ்சல்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த அஞ்சல்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தயார்