தூத்துக்குடி: மூன்று சென்ட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக பொறுப்பு வகித்தார். இவரது மகன் கரன், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மூன்று சென்ட் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே உள்ள சுவற்றில் மற்றொரு தலைவரின் டிஜிட்டல் போர்டு ஒட்டப்பட்டு உள்ளது. இதை கரன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் போர்ட் வைத்த முகேஷ் மற்றும் கூட்டாளிகளுக்கும், கரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தூததுக்குடி தென் பாகம் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்து உள்ளனர். இந்நிலையில், முகேஷ் தலைமையிலான ஒரு கும்பல், மாரிமுத்து வீட்டிற்கு சென்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரிமுத்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாக்குதலை தடுக்க வந்த கரனையும் கும்பல் மோசமாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
ரத்தக் காயங்களுடன் போராடிய கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து தலைமறைவான கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'குழந்தையை பலி கொடுத்தால் அப்பா உயிருடன் வருவார்' - பகீர் கடத்தல் பின்னணி