தூத்துக்குடி: கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரது நாட்டுப் படகில், நடுக்கடலில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் ஷேக் முகமது, அன்டோ மற்றும் ஜெயபால் ஆகிய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து குஜராத் நோக்கி சென்ற எஸ்.எஸ்.எல் குஜராத் என்ற சரக்கு கப்பல், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் நாட்டுப் படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படகு கவிழ்ந்து மூன்று மீனவர்களும் நடுக்கடலில் காயத்துடன் தத்தளித்துள்ளனர். இதில் நடுக்கடலில் 19 மணி நேரம் தத்தளித்த சேக் முகமது என்ற மீனவர் கடலிலேயே உயிரிழந்தார். மேலும், 22 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த மற்ற இரண்டு மீனவர்கள், அங்கே வந்த மற்ற நாட்டுப்படகு மீனவர்களால் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கம் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கடலோர காவல் நிலைய காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், குஜராத் கப்பல் நிறுவனம் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணைக்குப் பின்னர், குஜராத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல் குஜராத் கப்பல் நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு சங்கம் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், விபத்தில் பலியான மீனவர் சேக் முகமதுவிற்கு இழப்பீடாக 60 லட்சம் ரூபாய் மற்றும் விபத்தில் காயம் அடைந்த இரண்டு மீனவர்களுக்கும் தலா ஏழரை லட்சம் என 15 லட்சம் ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திடம் வழங்கியது.
மேலும், எஸ்.எஸ்.எல் குஜராத் கப்பல் நாட்டுப் படகில் மோதி படகு சேதம் ஆனதற்கு 15 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியது. இந்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் கயாஸ், அதன் நிர்வாகிகள் ராஜ், ரீகன் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பைச் சேர்ந்த பங்குத்தந்தை சர்ச்சில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பயன்படும் வகையில் எஸ்.எஸ்.எல் குஜராத் கப்பல் நிறுவனம் சார்பாக அதன் ஊழியர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?