தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சமுதாயத்தின் சார்பில் டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த டிஜிட்டல் போர்டை நேற்று (ஜூலை 10) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதனை அடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிஜிட்டல் பேனர் போர்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: Karur IT Raid: கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!
இதனை அடுத்து பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். மேலும் மர்ம நபர்கள் பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சியில் 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சமுதாயம் சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிச்செல்கின்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கடந்த 2 தினங்களுக்கு முன்பு மீனாட்சிபட்டி அருகே உள்ள அனியாபரநல்லூர் பகுதியில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர்.
அப்போது மீனாட்சிபட்டியைச் சேர்ந்த சிலர் போதையில் அவர்களை வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் அவர்களிடம் பைக்கை கேட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டுகளை வீசி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்' எனத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய தரப்பில் 6 பேர், மற்றொரு தரப்பில் 3 பேர் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கனல் கண்ணன் கைது; பேருந்து நிறுத்தப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம்!