ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது.
அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை;ப புறக்கணித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள அரசானையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.