தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாரா கலை வளர் மன்றம், மத்திய அரசின் ஜவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் நெல்லை கலை பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடைகாலப் பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பயிற்சி முகாமில் ஓவியம், பென்சில் ஓவியம், ஆயில் பெயின்டிங், தஞ்சாவூர் ஓவியம், கலர் பெயின்டிங், கீ போர்டு, கராத்தே, கேரம், சிலம்பம், ஸ்கேட்டிங், மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு, இசை, பரதம், கிட்டார், டிரம்ஸ், கணினி டிசைனிங், அனிமேஷன் தொழில்நுட்பம் மற்றும் புகைப்படத் தொழில்நுட்பம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கோடை காலத்தைப் பயனுள்ள வகையிலும், விடுமுறை காலங்களில் செல்போன், கணினி ஆகியவற்றில் மூழ்காமல் மாணவ, மாணவிகள் பயனுள்ள வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வரும் காலங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தனிநபர் வருமானத்தை உருவாக்கக் கூடிய பல்வேறு பயிற்சிகளை ஆர்வமுடன் அனைவரும் கற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சி முகாமில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இங்கு தரப்படும் சான்றிதழ்கள், எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
நாங்கள் கோடை காலங்களில் பயனுள்ள வகையில் ஆர்வத்துடன் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கற்று வருகிறோம்” எனத் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், இது குறித்து பயிற்சியாளர் ஷா நவாஸ் கூறுகையில், “கோடைகால சிறப்புப் பயிற்சி முகாம் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. 6 துறைகளின் கீழ் 300 கலைகள் கற்றுத் தருகிறோம். ஏழை மாணவ, மாணவிகள் இலவசமாகப் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஓவியம், பரதம், இசை, வயலின், கிட்டார், கீ போர்டு, மிருதங்கம், கராத்தே, களரி, குங்ஃபூ, கேரம் போர்டு, செஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்போக்கன் இந்தி போன்ற பல்வேறு பயிற்சிகள் கற்றுத் தருகிறோம்.
இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் என பங்கேற்று வருகின்றனர். இதில் கற்றுத் தரக் கூடிய பயிற்சிகள் வருங்கால வாழ்க்கைக்குத் தேவையானவை. இதில் உலகளாவிய பயிற்சிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உலகத்தில் பல இடங்களில் இந்த பயிற்சியைக் கற்று சிறந்த துறைகளில் உள்ளனர்” எனக் கூறினார்.
மேலும் இது குறித்து மாணவி பத்ரா கூறுகையில், “கோடை காலத்தில் ஓவியப் பயிற்சி பெற்று வருகிறேன். இங்கு பயிற்சி பெறுவது நல்ல முறையில் உள்ளது. இது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: சோழர் படை கட்டிய பெருங்கருணை சிவன் கோயில்.. கல்லூரி மாணவியின் கள ஆய்வில் தகவல்