தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் 2ஆம் நாள் தசரா திருவிழாவில், அம்பாள் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்சம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலின் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா, இந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறக் கூடிய தசரா திருவிழாவில், நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதார கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். மேலும், சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கோயிலில் சிறப்பு அன்னதானமும், அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
இதையும் படிங்க: சமாதானத் திட்டம் நிறைவேற்றம்; வணிகர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா - விக்கிரமராஜா அறிவிப்பு!
இந்நிலையில், திருவிழாவின் 2ஆம் நாளான நேற்று, அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அம்பாள் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்சம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 24ஆம் தேதி கோயில் கடற்கரையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” - கே.எஸ்.அழகிரி