தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த இரண்டு மாதங்களாக புளியம்பட்டி, நாரைக்கிணறு, கழுகுமலை ஆகிய காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்படும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிவந்தது.
இதனைத் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உத்தரவின்பேரில், மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான காவலர்கள், திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர்.
22 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து கைரேகைகளும் ஆய்வுசெய்யப்பட்டன. விசாரணையில், தென்காசி மாவட்டம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனே (37), தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாகத் தனிப்படை காவல் துறையினர் விரைந்துசென்று, பாலமுருகனைக் கைதுசெய்தனர். இவரிடமிருந்து பல்வேறு இடங்களில் திருடிய 22 சவரன் தங்க நகைகளும் பறிமுதல்செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்ட பாலமுருகன் மீது, இதுவரை கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட 23 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவர் ஏற்கெனவே இருமுறை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இவர் தமிழ்நாடு அளவில் பொதுமக்களிடையே பிரபலமாகப் பேசப்பட்ட வழக்கான கடையம் பகுதியில் தோப்பு வீட்டில் தனியாக இருந்த முதியவர்களைக் கொலைசெய்ய முயன்ற வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை - காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஆர்ப்பாட்டம்