2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்துவதற்கும், உயிரிழந்தவர்களின் அஞ்சலி செலுத்தும் வகையில் பொது இடங்களில் பிளக்ஸ், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் தடையை மீறி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்று அதிகாலையிலேயே உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடி ஃபாத்திமா நகரில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பெருந்திரளாக கூடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது, ‘ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அடியோடு அகற்றும் வரை ஓயமாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து ஃபாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு உறுப்பினர் கெபிஸ்டன் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எங்கள் மக்களை அரச பயங்கரவாதம் ஏவி சுட்டுக் கொன்றது. எங்களது வரிப் பணத்தில் வாங்கிய ஆயுதங்களை வைத்து எங்களை சுட்டு வீழ்த்தினர். இதை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் அரசுக்கு உறுதி கூறுவது என்னவென்றால் தமிழ்நாடு அமைச்சரவை உடனடியாக கூட்டி, கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் வரை எங்கள் மக்களின் போராட்டம் ஓயாது” என்றார்.
முன்னதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க : கூடங்குளம் 2ஆவது அணு உலை பழுது - 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு