திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
"திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, திமுக கோட்டையாக இருக்கும் திருவாரூர் தொகுதியை அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும்.
திமுக ஆட்சியில்தான், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்து விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக ஆட்சி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளிடமிருந்து ஒரு வாக்காவது வாங்க முடியுமா? முடிந்தால் விவசாயிகள் வாக்குகளை வாங்கிக் காட்டுங்கள். 2010ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ், திமுகவினர் தான் நீட் தேர்வை கொண்டுவந்தனர். இதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களுக்கு அப்போது அதிகாரம்தான் பெரியதாகத் தெரிந்தது மக்கள் நலன் தெரியவில்லை.
கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போதே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியும் திமுகவினுடையதே. இதை யாராலும் மறுக்க முடியாது" எனப் பேசினார்.
இதையும் படிங்க:'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு